பசியில் அழுத இரண்டரை வயது மகளுக்கு சாப்பாடு வாங்க பணம் இல்லாததால், குழந்தையை தந்தையே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் வசிப்பவர் ராகுல் பரமர் (45). ஐ.டி., ஊழியரான இவருக்கு பவ்யா என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஜியா என்ற குழந்தையும் இருந்தது. இவருக்கு கடன் உள்ளதாக தெரிகிறது. இதனால், கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி கேட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக மகளை அழைத்துச் சென்ற ராகுல், பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பவ்யா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூரு – கோலார் நெடுஞ்சாலையில் உள்ள கெந்தட்டி ஏரியில் ஜியா உடல் மிதந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார், தந்தை ராகுல் பரமரை கைது செய்தனர்.
பின்னர், போலீசாரிடம் அவர் கூறுகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், ”மகளை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்யும் நோக்கத்துடன் தான் காலையில் வீட்டை விட்டு வெளியேறினேன். மாலையில் ஏரிக்கரையில் காரை நிறுத்தி, சிறிது பணத்தில் பிஸ்கட், சாக்லேட் வாங்கி மகளுக்கு கொடுத்தேன். பிறகு இருவரும் விளையாடினோம். மதியம் ஜியா சாப்பிடதாததால், சிறிது நேரத்திற்கு பிறகு ஜியா அழ ஆரம்பித்தாள். சாப்பாடு வாங்கி கொடுக்க பணமும் இல்லை. இதனால், குழந்தையை என் மார்பில் இறுக்கமாக பிடித்து கொன்றேன். பிறகு, ஏரியில் குதித்து தற்கொலை செய்ய முயன்றேன். ஆனால், ஏரியில் குறைந்தளவு தண்ணீர் இருந்ததால், மகளின் உடலை ஏரியில் வீசிவிட்டு, ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்றேன்” எனக்கூறி போலீசாரையே அதிரவைத்தார். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.