திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் சதீஸ்பாபு ( 31) என்பவரிடம் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர், தன்னை ரகு (45) என்றும், நான் ஒரு மலையாளி என்றும் கூறியுள்ளார். எனது சொந்த மாநிலம் கேரளா. ஜோசியம் மற்றும் மாந்திரிகம் பூஜை செய்வதில் கைதேர்ந்தவர். உன்னை ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக்குகிறேன் என்றெல்லாம் கூறியுள்ளார். பின்னர், pappalyvishnumaya என்ற யூடியூப் சேனலுக்கு சென்று மாந்திரீகம் சம்மந்தமான வீடியோக்களை காண்பித்து சதீஸ்பாபுவிடம் முன்பணமாக ரூ.3,000 பணத்தை பெற்றுள்ளார்.
இதையடுத்து, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று மாந்திரீகம் செய்துவிட்டு ஒரு மணி நேரத்தில் திரும்ப வருகிறேன் என்று கூறி மணி நேரத்தில் வருகிறேன் என கூறி ரகு சென்றுள்ளார். ஆனால், அவர் திரும்ப வராததால், சதீஸ்பாபு மலைக்கோவில் பகுதியில் சென்று தேடிய போது, அங்கு மற்றொருவரிடம் ரகு பணம் பெற முயற்சி செய்து கொண்டிருந்தபோது சிக்கியுள்ளார்.
ரகுவிடம் சென்று சதீஸ்பாபு கேட்டபோது, நான் கேரளாவை சேர்ந்த மாந்திரீகன். உன்னை மாந்திரீகம் செய்து கொன்று விடுவேன் என ரகு மிரட்டியுள்ளார். இதையடுத்து, சதீஸ்பாபு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாந்திரீகம் செய்த ரகுவை கைது செய்து 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், இவரது சமூக வலைதள பக்கத்தில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில், ஒருவர் சொல்லும் எதிரி ஆட்களை மாந்திரீகம் மூலம் கொலை செய்ய 10 முதல் 20 லட்சம் வரை பணம் வசூலிக்கிறார். குறிப்பாக, பதவியில் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவரை மரணம் அடைய செய்து வேறொருவரை அந்த பதவியில் அமர வைக்க பணம் பெற்றுக் கொண்டு மாந்திரீகம் செய்வதாகவும் கூறியுள்ளார். இதுபோன்று பல்வேறு சித்து விளையாட்டுக்கள் மூலம் மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்த ரகு தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.