ஆன்லைன் ஃபுட் ஆர்டர் செய்வது, டெலிவரி செய்வது என பலவற்றிலும் பல வகையான குளறுபடிகள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என இரு தரப்பிலும் நடப்பது வாடிக்கைதான். அது தொடர்பான பல பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பல விமர்சனங்கள், கருத்துகளை பெறுவதும் தவறுவதில்லை. அந்த வகையில், coconut shawarma என்ற ட்விட்டர் பயனரின் ட்வீட்தான் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. அதன்படி, ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்திருந்த வாடிக்கையாளர் தான் இருக்கும் இருப்பிடத்திற்கான முகவரிக்கு பதில் முன்னாள் காதலியின் முகவரியை தேர்வு செய்திருக்கிறார். இதனால் அந்த நபருக்கு வரவேண்டிய உணவு அவருடைய முன்னாள் காதலிக்கு சென்றிருக்கிறது.

இது தொடர்பான அந்த பயனரின் ட்விட்டர் பதிவில், “தவறுதலாக நான் சாப்பிடுவதற்காக ஆர்டர் செய்த உணவை என்னுடைய முன்னாள் காதலியின் முகவரிக்கு அனுப்பிவிட்டேன். இப்போது அவர் எனக்கு “எனக்கு தெரியும் என்னை நீ மிஸ் பண்ணிருப்ப” என மெசேஜ் அனுப்பியிருக்கிறார்” இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், “இதுபோன்று எனக்கும் நடந்திருக்கிறது”, “டெலிவரியின் போது காசு கொடுக்கும் வகையில் COD போட்டிருக்க வேண்டும்”, “அந்த முன்னாள் காதலி நானாக இருந்திருக்கலாம். அந்த ஃபுட் எனக்கு கிடைத்திருக்கும்”, “நீங்கள் நினைத்திருந்தால் அந்த ஆர்டரை கேன்சல் செய்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் அவரை இன்னமும் விரும்புவதையே காட்டுகிறது” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.