தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு “தேர்தல் பத்திரங்கள் செல்லாது” என்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்திற்கு எதிரானது.
அரசை கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தேர்தல் பத்திரங்கள் கைமாறும் ஆதாயங்களுக்கு வழிவகுக்கும். கட்சிகளுக்கு யார் நன்கொடை தருகிறார்கள் என்பதை மக்கள் அறிவது அவசியம் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018இல் அமலுக்கு வந்தது. இதன்படி, பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையிலான தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.
ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால், தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.
இந்த சட்டத் திருத்தத்துக்குப் பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகளைப் பெற்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனியார் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன. குறிப்பாக பாஜக அதிக அளவிலான நன்கொடையை பெற்றுள்ளது.
ஆனால், தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தேர்தல் பத்திரம் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான், தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.