திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதற்கட்டமாக இன்று (பிப்.27) சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதை கூற வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வந்தனர். அப்போது சீமான் வீட்டில் இல்லாததால் வீட்டின் முன்பு, சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர்.
ஆனால், சீமானின் மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பெயரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி அந்த சம்மனை கிழித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சம்மனை கிழித்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரை தள்ளிவிட்ட சீமானின் காவலாளி அமல்ராஜ் என்பவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், “நேற்று நடந்தது நாங்கள் எதிர்பார்க்காதது.. போலீசார் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். ஈகோவுடன் செயல்படுகிறார்கள்.. வீட்டில் இருந்த எண்ணிடம் சம்மன் கொடுத்திருக்கலாம்.. அதை விட்டுவிட்டு வேணுமென்றே கேட்டில் ஓட்டிவிட்டு சென்றுள்ளனர். என் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை படிப்பதற்காக தான் தம்பியை கிழிக்க சொன்னேன். அதனால் தான் தம்பி கிழித்தார். என்னை கைது செய்ங்கள்.. நான் தானே கிழிக்க சொன்னேன்.. என் தம்பியையும், அமல்ராஜ் அண்ணனை விடுங்க்..
நடிகை வழக்கில் ஏற்கனவே மூன்றரை மணி நேரம் சீமான் விசாரணைக்கு ஒத்துழைத்தார். பாலியல் புகார் என்ற பெயரில் சீமானை அவமானப்படுத்துறாங்க.. எங்களை மன ரீதியாக துன்புறுத்தவே காவல்துறையினர் இப்படி செய்கிறார்கள்.. எங்கள் வீட்டு பாதுகாவல் மீது எந்த தவறும் இல்லை. அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர்.. அவர் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறார்.
அவரை அவமானப்படுத்தும் விதமாக இழுத்து அழைத்து செல்கிறார்கள். காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துள்ளனர். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்.. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மனித உரிமை ஆணையத்தில் காவல் ஆணையர் பிரவீன் மீது வழக்கு தொடர்வோம். காவல்துறை திமுகவின் கட்டுக்குள் உள்ளது. அவர்தான் இதை பிளான் பண்ணி செய்கிறார்கள்.” எனக் கூறினார்.