என்னுடைய உடலை மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக தானம் செய்கிறேன் என்று நடிகர் ஷிஹான் ஹுசைனி அறிவித்துள்ளார்.
கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. இவர், பல படங்களில் நடித்திருக்கும் நிலையில், கராத்தே மாஸ்டராக வலம் வந்தார். படிக்கும்போதே கராத்தேவில் ஆர்வம் காட்டிய இவர், நடிப்பிலும் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.
இருப்பினும் நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர், கடைசியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்த நிலையில், கடந்தாண்டு ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ படத்தில் நடித்தார். இந்நிலையில் தான், தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக சமீபத்தில் வீடியோ வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதுதொடர்பாக அவர் யூடியூப் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், “எனக்கு ரத்த புற்றுநோய் உள்ளது. இதற்கு மருத்துவர்கள், மொத்தம் 3 காரணங்கள் சொல்கிறார்கள். அதாவது, என்னுடைய ஜெனட்டிக் பிரச்சனையால் வந்திருக்கலாம். இல்லையென்றால் ஏதேனும் வைரஸால் வந்திருக்கலாம். அப்படியும் இல்லையென்றால், ஏதேனும் ஒரு ஷாக்கினால் வந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு நாள் வாழ்வதற்கு எனக்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுகிறது. நான் ரத்த புற்றுநோயை எதிர்த்து போராடி மீண்டு வருவேன். நான் லட்சக்கணக்கானோருக்கு கராத்தே கற்றுக் கொடுத்துள்ளேன். கோழை தான் மரணத்தை கண்டு பயப்படுவான். வீரன் அல்ல. 2 நாள் இருக்குமோ, 3 நாள் இருக்குமோ அந்த நாட்களில் என்னால் முடிந்ததை செய்வேன். மன உறுதியுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் ஷிஹான் ஹுசைனி ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”என்னுடைய உடலை மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன். அதேசமயம், என் இதயத்தை மட்டும், என் வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தப் பதிவை படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே மருத்துவமனைக்கு வந்து என்னுடைய அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையொப்பத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Read More : 10ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.81,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!