நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011இல் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து விட்டு சென்ற நிலையில், கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கடிதத்தை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னையில் இருந்தும் தூரத்தில் தான் என்னை போலீசார் வைத்திருந்தனர். வீரலட்சுமிக்கு தெரிந்த இடம் என்பதால் அங்கு வைத்திருந்தனர். கடந்த சில தினங்களாக வீரலட்சுமி ஒரு வழியில் செல்கிறார் என்னை ஒரு வழியில் அழைத்துச் செல்கிறார். அந்த இடத்தில் இருந்து என்னை வெளியே போக வைத்துவிட்டார். உணவையும் நிறுத்திவிட்டார். அதிகமான கொடுமைகள் நடந்தது. இந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டு பெங்களூர் செல்கிறேன். சீமானிடம் பேசினேன். வழக்கை வாபஸ் பெற்று விட்டேன்.
இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. போலீசாரின் நடவடிக்கை மெதுவாக இருந்தது. 20 சம்மன் அனுப்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது என சீமான் கூறிவிட்டார். இரண்டு வாரமாக வீட்டு காவலில் இருந்தது போல் இருந்தேன். செல்போன் கூட இல்லை. சீமான் சூப்பர். அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எனது தோல்வி ஒப்புக்கொள்கிறேன். திமுக விளையாட்டு எனக்கு தெரியாது. சீமான் புல் பவராக உள்ளார். சீமானை தற்போது ஒன்றும் செய்ய முடியாது.
நான் சீமானிடம் காசு வாங்கவில்லை. சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். சீமானை விசாரணைக்கு கொண்டு வர முடியவில்லை. அவர் பவராக உள்ளார்“ என தெரிவித்தார். விசாரணைக்கு சீமான் ஆஜராக இருந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி வழக்கை வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போலீஸின் சம்மனை ஏற்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக சீமான் இன்று ஆஜரானார். அவரது மனைவி, வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் மட்டுமே காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடிய நிலையில், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
பின்னர், காவல்நிலையத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”2 பெண்களால் 13 ஆண்டுகளாக வழக்கு என்ற பெயரில் நான் தான் வன்கொடுமைக்கு ஆளானேன். விஜயலட்சுமிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது மிகப்பெரிய நகைச்சுவை. என் மீது களங்கம் ஏற்படுத்திய வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.