ஆந்திராவில் நடிகை ரோஜா முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது ஆளும் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். செம்பருத்தி படத்தில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு அவர் உறுதுணையாகவும் இருந்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை. இந்நிலையில், இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார். ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டும் என்றால், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்றார். இதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.