மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. அந்தவகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். மற்ற மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதி கொடுத்தேன். உண்மைதான். நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன். மக்களை ஏமாற்ற மாட்டேன். என்ன விமர்சனம் வந்தாலும் கேலிகள், கிண்டல்கள் வந்தாலும் அமைச்சர்களும், நானும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம். நான் எப்போதுமே மாணவர்களின் பக்கம் நிற்பேன். நீட் பிரச்சனை மக்கள் போராட்டமாக மாற வேண்டும்” என்று தெரிவித்தார்.