இமாச்சல பிரதேசத்தில் கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் சென்னை கண்ணமாப்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி, ”அருமை மகன் அன்பு மகன் வெற்றி நம்மை விட்டு பிரிந்தது என்பது விதியின் விபரீதமாக நினைக்கிறேன். போகவே வேண்டாம் என்று சொன்னேன். அப்படி அழுத்தி சொன்னால் போகாமல் இருப்பவன் இந்த முறை இது கடைசி என்று சொல்லிவிட்டு சென்றான். ஆனால், இப்படி அவனது கடைசி பயணமாக இருக்கும் என்று நான் ஒருகாலமும் நினைக்கவே இல்லை.
இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பணிகளில், அரசு உயர் பதவிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற அரசின் உயர் பதவிகளில் பணிபுரிகின்ற, வாய்ப்பை பெற்ற அனைத்து மகன்களும், மகள்களும் இங்கே வந்திருக்கின்றனர். என்னுடைய ஒரு மகன் போனாலும், எனக்கு பக்க பலமாக எனக்கு இன்னும் நிறைய மகன்கள் இருக்கிறார்கள். மகள்கள் இருக்கிறார்கள் என்ற மன உறுதியோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சக மனிதனுக்காக வாழ வேண்டும். ஒரு சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு நின்று விட கூடாது என்பதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 239 ஜாதிகளில் 170 ஜாதிகளை சார்ந்தவர்களை அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். மீதிமுள்ள 89 ஜாதிகளை சேர்ந்தவர்களையும் அரசுப் பணியில் அமர வைப்பது தான் என்னுடைய ஒரே லட்சியம் என்று என்னுடைய மகன் மரணத்தில் உறுதி எடுத்துக் கொள்கிறேன். அதை நோக்கி பயணம் செய்து சக மனிதனுக்காக வாழ்ந்து என் மனம், என் மகனின் ஆன்மா சாந்தியடைகின்ற வகையில் இந்த சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன்.
எனக்கு ஆறுதல் சொல்லிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்து பல்வேறு பணிகளை எல்லாம் விட்டு விட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எனக்கு ஆறுதல் சொல்ல வந்த எனது மகன்களுக்கும், எனது மகள்களுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் வெற்றியாளாராக பவனி வருகின்ற அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் மனம் கலங்க மாட்டேன். காரணம் இத்தனை மகன்களை நான் பெற்றிருக்கிறேன். அவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள். ஆகவே இன்னும், வலிமையோடு சேவையை பிரதானப்படுத்தி என்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என்று என் மகனின் இறுதி நாளில் நான் சூளுரைத்து அந்த பாதையிலே நான் பயணிக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்று உருக்கமாக பேசினார்.