இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், திருமணம் செய்து கொள்வதாக காதலன் உறுதி அளித்ததால் தான், அவருடன் உறவு கொண்டேன். ஆனால், தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டதால், அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட், தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அந்த பெண் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இன்றைய ஒழுக்க நடைமுறைகளே வித்தியாசமாகியுள்ளது. தோல்வியடையும் காதல் உறவில் இரு தரப்புமே பாலியல் உறவை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சொல்லும் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டால், கல்லூரி மாணவ – மாணவி இடையிலான உறவும் கூட தண்டனைக்குரியதாகி விடும்.
காதலை முறித்துக் கொள்ள முடியும் எனும் போது உடலுறவை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இங்கு பெரும்பாலும் பழமைவாத மனநிலைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோன்ற புகார்கள் ஆண் மீது மட்டுமே சுமத்தப்படுகிறது. ஆண் மட்டுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது போல், நம் அமைப்பில் உள்ளன. தோல்வியடையும் காதலுக்கு இந்த அளவுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமா..?” என்றனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர், “இது ஒரு காதல் உறவு இல்லை. அதனால் தான் முறிந்துவிட்டது. இது ஏற்பாடு செய்யப்பட்ட உறவு. இந்த விஷயத்தில் உடன்படாவிட்டால் தன்னை திருமணம் செய்ய மாட்டார் என பெண் நினைத்துள்ளார். ஆணுக்கு வேண்டுமென்றால், சாதாரண உடலுறவாக இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு அப்படி இல்லை” என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி சுந்தரேஷ், “என் மகள் இந்த நிலையில் இருந்தாலும் கூட, நான் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில், பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை அளிக்க முடியுமா? ஆனால், அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், ”இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென அந்த இளைஞர் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம்” என்றனர்.