பிரதமர் மோடியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளை வைத்து விவசாய நிலங்களை வாங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மாவட்ட தலைமையகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில், இதில் முதல்வர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். அதன்பின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில், “என்னுடைய அரசியல் பயணம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இருந்தே தொடங்கும். ஒன்றிய அரசு முக்கிய துறைகளை மேம்படுத்த தவறிவிட்டது. விவசாயிகளை பலவீனப்படுத்தி ஆபத்தான சதி திட்டத்தை பாஜக தீட்டுகிறது.
பிரதமர் மோடியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளை வைத்து விவசாய நிலங்களை வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால்தான், பம்பு செட்டுகளில் மின் மோட்டார்களை இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது. அதோடு யூரியா மற்றும் உர விலைகளையும் ஒன்றிய அரசு உயர்த்தி விட்டதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், விவசாயத்தை கைவிடக்கூடிய சூழல் ஏற்படும். வருகிற 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அல்லாத அரசு அமைந்தால் நாடு முழுவதும் விவசாயத்திற்காக இலவச மின் விநியோகம் வழங்கப்படும்” என்றார். பாஜக அரசுக்கு பேரிடியாக முதல்வர் சந்திரசேகர் ராவ் பொதுக்குழு கூட்டத்தில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.