வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது வழக்கு தொடரலாம் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் மக்கள் சமுதாயங்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு (எப்ஐஆர்) செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, சமூகங்களுக்கு இடையே பகையை தூண்டும் வகையில் பேசுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்த புகாரும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய தாமதமானால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, எந்த நபர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் பல்வேறு வெறுப்பு குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்களை விசாரித்து வந்தபோது இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.