தனியார் செப்டிக் டேங்கில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பாவார் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.
சென்னை விநாயகபுரத்தை சேர்ந்த யோகேஷ்பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. இதுதொடர்பாக பலமுறை சென்னை மாநகராட்சிக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த செப்டிக் டேங்க் நிறைந்துவிட்ட நிலையில், கழிவுகளை அகற்றுவதற்காக கடந்த 2013 செம்டம்பர் 30ஆம் தேதி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, முனுசாமி என்பவர் விஷவாயு தாக்கி இறந்துவிட்டார். இதையடுத்து, முனுசாமியின் உடல் வெளியே எடுக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் வழங்கினேன். இந்நிலையில் தான், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், “தனியார் செப்டிக் டேங்கில் விபத்து ஏற்பட்டால் அதற்கு வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர்தான் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. உரிய விதிகளின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறுகையில், மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு காரணமாகிவிட்டார். இதனால், உரிய விதிகளின் அடிப்படையில் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இழப்பீடு தொகை மாநகராட்சி சார்பில், உயிரிழந்தவரின் மனைவியிடம் கொடுத்துள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் இருந்து வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்” என்று உத்தரவிட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.