”தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் திராவிட மாடல் இல்லை… தமிழ்நாடு மாடல்..” என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்தி, துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராகுல் காந்தியின் நடைபயணம் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்கும். ராகுல்காந்திக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் தமிழில் அர்ச்சனை பெயர் அளவிலே உள்ளது. கோயில்களில் தமிழ் வழிபாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
கஞ்சா, குட்கா, ஹெராயின், போன்றவை முருகன் ஆணையாக போதை பொருள்கள் என ஒத்துக் கொள்கிறேன் என தெரிவித்த சீமான், ஆனால் டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும். விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் முயற்சியில் எச்.ராஜா பேசி வருவதால், அவருக்கு எனது நன்றி. திருச்செந்தூர் நகராட்சியின் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆடியோ வெளியிட்டு மனச்சான்றோடு பேசிய திமுக கவுன்சிலருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் சீமான் கூறினார்.