90-களில் தமிழ் சினிமாவில் வில்லனாக புகழ்பெற்றவர் பொன்னம்பலம். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். 1989ஆம் ஆண்டு ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஸ்டண்ட் மேனாகவும், நடிகராகவும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த பொன்னம்பலத்திற்கு 1993ஆம் ஆண்டு ‘வால்டர் வெற்றிவேல்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
பின்னர், பல முக்கிய திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தார். ‘நாட்டாமை’, ‘முத்து’, ‘அமர்க்களம்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார். ‘முதல் எச்சரிக்கை’, ‘அம்மையப்பா’ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார் பொன்னம்பலம். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் வியக்கத்தக்க வகையில் நடிப்பதற்காகவும், பெரிய தோற்றம், வில்லத்தனமான முகம், அபாரமான நடிப்பு ஆகியவற்றிற்காக பாராட்டைப் பெற்றவர். இது தவிர விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராக பொன்னம்பலம் கலந்துக் கொண்டார்.
சில காலங்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்த அவர், தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்டு, தான் பட்ட கஷ்டங்களையும், உதவியவர்களையும் பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், “எனக்கு உடம்பு ரொம்ப முடியாம போய்டுச்சு, சிகிச்சைக்கு காசு இல்லை. அப்போ தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அவர்களுக்கு போன் பண்ணி உதவி கேட்டோம். எதோ ஒரு லட்சம் தருவார் சிகிச்சை பண்லாம்னு நெனச்சு அவர்கிட்ட கேட்டேன். ஆனால், தெய்வம் போல என் முழு சிகிச்சை செலவு கிட்டத்தட்ட 40 லட்சம் வரை செலவு பண்ணி என்னை காப்பாற்றிவிட்டார்” என்று எமோஷனலாக பேசியுள்ளார்.
Read More : அச்சுறுத்தும் டெங்கு..!! அச்சத்தில் மக்கள்..!! கிடுகிடுவென உயரும் எண்ணிக்கை..!! பாதுகாப்பா இருங்க..!!