காமெடி நடிகர் சேஷுவுக்கு 10 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார். இன்று அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவருடைய நண்பரான “டெலிபோன் ராஜ்” கண்ணீரோடு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். சேஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு 10 லட்சம் ரூபாய் ஆபரேஷன் செய்வதற்காக தேவைப்படுகிறது என்று நடிகர் அமுதவாணன் உட்பட பலர் சேஷுவுக்காக வீடியோ வெளியிட்டிருந்தனர். ஆனால், அந்த பணம் அவருக்கு சேரவில்லை என்று சமீபத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அது குறித்து டெலிபோன் ராஜ் காட்டமாக பேசியுள்ளார்.
அதில் அவர் பேசுகையில், ’சேஷு உயிரோடு இருக்கும்போது பலருக்கு உதவி செய்திருக்கிறார். பல குடும்பங்கள் அவரால் வாழ்ந்திருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு கிடைப்பதே சொற்ப வருமானமாக இருந்தாலும் அதை கொண்டு பலருக்கு உதவி செய்வதுதான் சேஷுவின் வேலை. அவர் தனக்கு கிடைத்த வருமானத்தை சேர்த்து வைத்திருந்தால் இன்று அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அவருக்கு கடைசி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் ஆபரேஷன் செய்வதற்காக தேவைப்படுகிறது என்று சொன்னபோது கூட அவரோடு நடித்த நடிகர்கள் யாருமே அவருக்கு உதவி செய்யவில்லை என்று தெரிகிறது.
சேஷு கடைசியாக நடித்த படமாக இருக்கட்டும் அல்லது அவருடைய நண்பர்களில் சிலர் பெரிய நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கூட தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்திருக்கலாம். எங்களை போன்ற சின்ன நடிகர்களுக்கு 10,000 என்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், பெரிய நடிகர்களுக்கு அப்படி இல்லை. அவர்களால் ரூ.10 லட்சம் என்பது எளிதாக புரட்ட கூடியது. அதை அவர்கள் கொடுத்திருந்தால் சேஷு இன்று உயிரோடு இருந்திருப்பார். எங்களை நடிகர் சங்கமும் பெரியதாக கண்டுகொள்ளவில்லை. எங்களை சில படங்களிலோ, ஈவெண்டுகளிலோ நடிக்க வைத்துவிட்டு அதற்கான சம்பளத்தை சரியாக தராமல் அலைக்கழிக்கிறார்கள்.
அது போல சேஷு அவருடைய வருமானத்தில் இன்சுரன்ஸ் போட்டு வைத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. ஆனால், அவரால் அது செய்ய முடியாது. ஏனென்றால், எங்களுக்கு எப்போதும் வருமானம் வந்து கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் சூட்டிங் இருக்கும் பிறகு நாட்களில் நாங்கள் சும்மாதான் இருக்கிறோம். கிடைக்கிற சம்பளம் அடுத்த நாள் செலவுக்கு போய்விடுகிறது. பெரியதாக எதுவும் சேர்த்து வைக்க முடியவில்லை. சேஷு பலருக்கு உதவி செய்திருக்கிறார். அவரோடு பலர் நண்பர்களாக இருந்தபோதும் அவருடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது. என்னை போன்ற சின்ன நடிகர்களுக்கெல்லாம் இப்படி ஒரு பிரச்சனை வந்தால் யாரும் உதவ மாட்டார்கள் என்று தெரிகிறது” என்று கண்ணீர் மல்க பேசினார்.
Read More : Seeman | ”ஊழல் செய்தவர்கள் தேர்தல் போட்டியிட தடை”..!! நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு..!!