தேனி மாவட்டம் கம்பம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணத்தை முடித்துவிட்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ”கம்பம் பள்ளத்தாக்கில் சுவையான திராட்சை விவசாயம் லட்சக்கணக்கான ஏக்கரில் நடைபெற்று வருகிறது. ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு தான் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அது குறித்து வாய் திறக்கவே இல்லை.
கேரள அரசு கம்பம் பகுதியை குப்பை மேடாக பயன்படுத்தி வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனை திருப்திப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர். நடைபயணத்தின் போது கம்பத்தில் உள்ள பெரிய கல்வி நிறுவனம் யாருடையது என விசாரித்தேன். அந்த கல்வி நிறுவனத்தை நடத்துபவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் கஞ்சா வியாபாரி என்றும் தெரிவித்தார். இந்தியாவின் கஞ்சா தலைநகராக தமிழகம் இருக்கிறது.
சாராய ஆலைகள் நடத்துவது திமுக தான். அவர்கள் தான் மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். இந்தி பள்ளிகள் நடத்துகிறார்கள். இவர்கள் தான் இந்தியை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள். காங்கிரஸ், திமுக ஆட்சியில் நீட்டை கொண்டு வந்துவிட்டு இப்போது நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை 1971ஆம் ஆண்டு கருணாநிதி வரவேற்றார். இப்போது அவருடைய மகன் ஸ்டாலின் எதிர்க்கிறார்.
இந்து தர்மத்தில் சில பிரச்னைகள் இருக்கின்றன. அது மனிதர்கள் உருவாக்கியது. இந்து தர்மத்தில் தவறில்லை. அதில் மனிதர்கள் ஏற்படுத்திய தவறை விவேகானந்தர் போன்ற மகான்கள் சரிசெய்துள்ளனர். எனவே, இந்து தர்மத்தை ஒழிப்போம் என்பதை ஏற்க முடியாது. சனாதனம் கடவுளை எப்படி கும்பிட வேண்டும், எப்போது கும்பிட வேண்டும் என்பதை சொல்லவில்லை. எப்போது வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம், வழிபடலாம்.
கம்பத்தில் கூட பட்டத்து காளையை மக்கள் வழிபட்டு வருகின்றனர். இப்படிபட்ட சனாதனத்தைத் தான் உதயநிதி ஒழிப்பேன் என்று பேசுகிறார். உதயநிதியின் அம்மா துர்கா ஸ்டாலின் தீவிர ஆன்மீகவாதியாக உள்ளார். அவரிடம் சென்று உதயநிதி சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறியிருந்தால், பளார் பளார் என அறைந்திருப்பார்” என்றார்.