“தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால், அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்கு தான் கிடைக்கும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை மூலம் 1,800 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 2,820 கோயில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 820 அம்மன் கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.
கோயில் திருப்பணிகளுக்கு ரூ.1,320 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் திருப்பணிகளுக்காக உபயதாரர் நிதியாக மட்டும் சுமார் ரூ.1,320 கோடி வந்துள்ளது. மேலும், கிராமப்புற பகுதிகளில் உள்ள 10,000 கிராமப்புற கோயில்களின் திருப்பணிகளுக்காக ரூ.212 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால், அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்கு தான் கிடைக்கும்” என்று தெரிவித்தார். அமைச்சரின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “தெய்வத்தை வைத்து வாக்கு கேட்டால் அது பாஜக, அந்த தெய்வமே வாக்களித்தால், அதுதான் திமுக” என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஊக்கத்தொகை உயர்வு
அர்ச்சகர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா தரிசன வசதி அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்றும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்/