நாமக்கல்லில் இன்று நடைபெற்ற குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் ஆட்சியர் முன்னிலையில் இருத்தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நாமக்கல் அடுத்துள்ள கொண்டமநாயக்கன்ப்பட்டி அரசு புறம்போக்கு நிலத்தில் “மேனகா” என்ற பெயரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியை 3.75 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், கொண்டமநாயக்கன்ப்பட்டி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், செயல்படும் குவாரியை விரிவாக்கம் செய்து அந்த ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அப்போது குவாரி தங்கள் பகுதியில் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் செழிக்கும் எனவும் பேசினர். அதனைத்தொடர்ந்து பேசிய சிலர் குவாரிக்கு அருகே கோயில், 300 மீட்டர் அருகே வீடுகளுக்கு விவசாய நிலங்களும் உள்ளன. மேலும் அப்பகுதியில் இருந்து 6கிமீ தொலைவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் மலைக்கோட்டையும் உள்ளது எனவும் எனவே இந்த குவாரி அமைக்க கூடாது எனவும் பேசினர்.
அதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சண்முகம் மற்றும் முகிலன் ஆகியோர் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பாறைகளை முறைகேடாக வெட்டியுள்ளதாகவும், தொடர்ந்து அப்பகுதியில் குவாரிக்கு அனுமதி வழங்கினால் கனிம வளங்கள் அதிகளவில் கொள்ளை போகும் என்றும் எனவே இந்த குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது எனவும் பேசினர்.
அப்போது கூட்டத்தில் இருந்த குவாரி ஆதரவாளர்கள் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தது மட்டுமின்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மைக்கை பிடிங்கி ஆட்சியர் முன்னிலையில் அடிக்க பாய்ந்தனர். இதனை கண்ட அங்கிருந்த போலீசார் இருத்தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனையடுத்து கூட்டம் தொடங்கி அரை மணி நேரத்திற்குள் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.