பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை எனில், மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது..
திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து அரசு மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.. இந்தியாவிலேயே மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இரவு நேரத்திலும் செயல்படுவதால், ஏராளமான விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.. எனினும் தமிழகத்தில் மது விற்பனை குறைந்தபாடில்லை.. எனவே 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும்..
மதுகுடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்க வேண்டும்.. டாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை மாற்றியமடைக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டிருந்தார்.. இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது சீருடையுடன் மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் மனுதாரர் தரப்பில் வழங்கப்பட்டன..
அதை பார்த்த நீதிபதிகள், இதுபோன்ற வழக்கு தொடர்ந்த மனுதாரரை நீதிமன்றம் பாராட்டுவதாக தெரிவித்தனர்.. மேலும் “ சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது.. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.. இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்..” என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.. மனுதாரர் இந்த வழக்கு தொடர்பான விவரங்களை தொடர்ச்ச்சியாக சேகரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்..