வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரைமுருகன் கூட்டுறவு என்றாலே கடன் தள்ளுபடி செய்வார்கள் என்றால் எப்படி ஆட்சி நடத்துவது கடன் வாங்கினா ஒழுங்கா கட்ட வேண்டும் என கூறியது சர்ச்சையாகி உள்ளது.
காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் ,ஜெகத் ரட்சகன் , சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் , அமுலு உள்ளிட்டோரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளானோர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, 1248 பயனாளிகளுக்கு ரூ.15. 41 கோடி கடன் உதவியை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்அவர் கூறியதாவது, ‘கூட்டுறவுத்துறையில் மக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்தால் எப்படி அரசு இயங்கும். பயிர்கடன் , கால்நடை கடன் மாற்றுத்திறனாளிகள் கடன் இப்படி வாங்கிய அனைத்து கடனையும் எப்படி ஒரு அரசு தள்ளுபடி செய்ய முடியும். சர்கார் சரியாக நடக்க வேண்டும் என்றால் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்த வேண்டும். எப்படியிருந்தாலும் தள்ளுபடி செய்வார்கள் என்ற நிலைமை வந்துவிட கூடாது. கடனை திருப்பி கட்டும் நல்ல உணர்வோடு இருக்க வேண்டும்’ என பேசினார்.