ஒரு வீட்டை வாடகைக்கு விடுவது என்பது பல்வேறு விதமான பொறுப்புகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டவையாகும். இதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது அட்வான்ஸ் தொகை தான். நம் நாட்டில் பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு விடும்போது, அந்த வீட்டிற்கு 3 மாதம் அல்லது 6 மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாக வீட்டு உரிமையாளர்கள் வாங்கிக் கொள்வார்கள்.
பின்னர், வீட்டை காலி செய்யும்போது வீட்டின் சேதத்தை கணக்கிட்டு, சில கழித்தல்கள் போக, அட்வான்ஸ் தொகையில் மீதி பணத்தை வீட்டு உரிமையாளர்கள் நம்மிடமே கொடுத்துவிடுவார்கள். ஒருவேளை வீட்டு உரிமையாளர் எந்தவொரு காரணமும் இன்றி, அட்வான்ஸ் தொகையை த மறுத்தால், வாடகை இருந்தவர்களுக்கு பெரும் பிரச்சனையாக அமையும். இந்த மாதிரியான சூழலில் என்ன செய்யலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்திய ஒப்பந்த விதி, 1872 : வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை வீட்டு உரிமையாளர் மீறினால், வாடகை இருந்தவர்கள் இந்த விதியின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்.
பரிமாற்ற கடன்கள் சட்டம், 1881 : வீட்டு உரிமையாளர் டெபாசிட் தொகைக்கு பதில் ஒரு செக்கை வழங்கி, அது பவுன்ஸ் ஆனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்.
நுகர்வோர் பாதுகாப்பு விதி, 2019 : நியாயமற்ற முறையில் உரிமையாளர் அட்வான்ஸ் தொகையை வைத்துக் கொள்ள நினைத்தால், அவர் மீது நுகர்வோர் புகாரை அளிக்கலாம்.
அட்வான்ஸ் தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிகள் :
சட்டரீதியான நடவடிக்கையை எடுப்பதற்கு முன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்து வைக்க முடிவு செய்யலாம். மெசேஜ் மூலமாக பேசி பணத்தை திருப்பி தருமாறு கேட்கலாம். ஒருவேளை உரிமையாளர் இதற்கு பதிலளிக்கவில்லை என்றால், அடுத்தபடியாக சட்டத்திற்கு உட்பட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பலாம். இந்த நோட்டீஸ் மூலமும் பதில் கிடைக்காத பட்சத்தில், வாடகை ஒப்பந்தம், அட்வான்ஸ் தொகை கொடுத்ததற்கான ஆதாரம், வாடகைக்கு வரும்போது இருந்த வீட்டின் நிலை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காலி செய்யும்போது வீட்டின் நிலைக்கான புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களை வைத்து சிவில் வழக்குப் பதிவு செய்யலாம்.