தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மே மாதத்தில் மின்சார விநியோக சட்டத்தில் திருத்தம் செய்து வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், புதிய மின் இணைப்பு கோரிய 7 நாட்களில் மின் இணைப்பை வழங்காவிட்டால், நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ”அனைத்து கட்டுமானப் பணிகளும் தயார் நிலையில் இருந்து புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் புதிய நுகர்வோருக்கு ஒரு வாரத்தில் மின் இணைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், நாளொன்றுக்கு ரூ.100 என்ற வீதம் நுகர்வோருக்கு மின்சார வாரியம் இழப்பீடு வழங்கும்.
ஒருவேளை மின் இணைப்பு வழங்க தாமதமானால், அதற்கு மின் இணைப்பு விரிவாக்கம் தேவைப்படுதல், முக்கிய மின்மாற்றி அமைக்கப்பட வேண்டியது, புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டிய போன்ற காரணங்களுக்கு கூட விதிமுறையில் கூறப்பட்டிருக்கும் நாட்களை தாண்டி கால தாமதம் செய்யக்கூடாது. மின்வாரிய அதிகாரிகள் கண்டிப்பாக 10 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும்.
இழப்பீடு வழங்கப்படும் 10 நாட்களை தாண்டி இணைப்பு வழங்குவது தாமதிக்கப்படாது. மேலும், புதிய மின் இணைப்பிற்கான விண்ணப்பத்தில் ஏதேனும் தகவல்கள் பூர்த்தி செய்யவில்லை என்றால் அது குறித்து தகவலை விண்ணப்பித்தவருக்கு 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய விதிமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை அது கிடைத்தவுடன் அதனை முழுமையாக பின்பற்றுவோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.