புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுத் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலைக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அப்போது, மனித சங்கிலி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ”புதுச்சேரியில் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிடில் எஸ்மா சட்டம் பாயும். போராட்டத்தைக் கைவிட்டு மின்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்” என எச்சரித்தார்.