ஒரு நபர் ரேஷன் கார்டுதாரர்களிடம் காப்பீட்டு அட்டை இல்லையென்றாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை மேற்கொள்ள கடந்த 2009ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இத்திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’ திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராம நிர்வாக அலுவலர் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தால், உடனடியாக காப்பீடு அட்டையை கிடைக்கும். இதன் மூலம் பயனாளிகளின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டுமானால், ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்திற்கு ஆண்டு வருமான வரன்முறை எதுவும் இல்லை.
இத்திட்டத்தில் இணைவதற்கு ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உறுப்பினர் சேர்க்கை மையத்தில், இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில் தான், ஒரு நபர் ரேஷன் கார்டுதாரர்களிடம் காப்பீட்டு அட்டை இல்லையென்றாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒரு நபர் மட்டுமே குடும்ப உறுப்பினராக உள்ள ரேஷன் அட்டைதாரர்களிடம் காப்பீடு அட்டை இல்லாமல் இருக்கலாம். ஏற்கனவே, அவர்கள் ஆதரவற்றவர்களாக இருக்கும் நிலையில், சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைகளுக்கு வரும்போது, காலதாமதம் செய்யாமல், அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ’கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படுமா’..? புதிய விதிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!