வீட்டில் பூஜை அறை நேர்மறை எண்ணங்கள் வளர்க்கும் இடமாகும். பொதுவாக தினந்தோறும் இறைவனை வழிபட்டு அதன் பின்னரே அந்த நாளின் வேலைகளை தொடங்குவது வழக்கம். அனைவரின் வீட்டிலும் அவரவர் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்து வைத்திருப்போம். தினமும் பூஜை செய்வதன் மூலம் நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து மன அமைதி நிறைந்த சூழலும் நம்மை சுற்றி ஏற்படும் என்பது ஐதீகம்.
வீட்டின் பூஜை அறையில் நாம் சில தவறுகளை செய்வதால் வீட்டில் வறுமை அதிகரிப்பதுடன், செல்வமும் தங்காமல் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அந்த வகையில் வீட்டில் உள்ள பூஜை அறையில் செய்ய வேண்டியது,செய்ய கூடாதவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்த பின்னர் சுவாமிக்கு ஏற்றிய கற்பூர தீபம் தானாக குளிர்ந்து (அனைந்து) விடும் அதை நாமாக அனைக்க கூடாது. பூஜை அறையில் சாமி படங்களுடன் மறைந்த நம் மூதாதையர் படத்தை வைக்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன்கள் நமக்கு கிடைக்கும். வீட்டில் பின் வாசல் கதவு இருந்தால் அதை மூடிவிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.
சனி பகவானின் சிலையை வீட்டு பூஜை அறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பூஜை அறையில் எந்த ஒரு உக்கிரமான அல்லது கோபமான தெய்வத்தின் புகைப்படத்தை வைக்கக்கூடாது. சேதமடைந்த புகைப்படங்கள், சிலைகள் மற்றும் உருவங்களை பூஜை அறையிலிருந்து அகற்றிவிட வேண்டும். ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை கொடுக்கும். ஒழுங்காக அமைக்கப்பட்ட மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை மட்டும் தான் பூஜை அறையில் வைக்க வேண்டும்.
வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தும் வெற்றிலை, பாக்கு பழங்களை நேரடியாக தரையில் வைக்க கூடாது. ஏதாவது தட்டு அல்லது இலையில் தான் வைக்க வேண்டும். எஞ்சியிருக்கும் பூஜை பொருட்களை அப்படியே அறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். வெண்ணையில் லட்சுமி தேவி வாசம் செய்வதால் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டில் வெண்ணையை உருக்க கூடாது. அதே போல் தானம் கொடுக்கும் போது அந்த தானத்துடன் சேர்த்து துளசியும் கொடுங்கள் அது நல்ல பலனை தரும் என்றும் ஜோதிட சாஸ்திரம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.