“யாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் முத்துசாமி பதிலளித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, ”எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக உடனடி அனுமதி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். சதுர அடிக்கு இரு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிமுகவினர் கூறுவது தவறு.
எதிர்வரும் தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும். இருப்பினும் அவர் தற்போது சிறையில் உள்ளது வருத்தமளிக்கிறது. திமுகவில் மூத்த அமைச்சருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கருத்து கூறியுள்ளார். எங்கள் கட்சியில் யாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்” என்றார்.