உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயதான இவர், தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரைக் காதலித்து வந்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள். இந்நிலையில், பிரீத்திக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. ஆனால், பூனம் குமாரி நினைவு காரணமாக திருமண ஏற்பாடுகளைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரீத்தி.
ஒருகட்டத்தில் பூனம் குமாரி மற்றும் பிரீத்தி சாகர் இருவருக்கும் இடையே நிலவி வந்த உறவு வீட்டில் தெரியவந்தது. இதனால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தச் சூழலில் பூனத்தை அழைத்து ‘நீ ஆணாக மாறினால் பிரீத்தியை திருமணம் செய்துகொள்ளலாம்’ என அவரிடம் பிரீத்தியின் தாயார் ஆலோசனை கூறியுள்ளார். இதைக் கேட்டு பூனம் குமாரி, லக்கிம்பூர்கேரியில் வசிக்கும் ராம்நிவாஸ் என்ற மந்திரவாதியை சந்தித்து உள்ளார். அவர், தன்னை ஆணாக மாற்றும்படி மந்திரவாதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேநேரத்தில், பூனத்தைக் கொலை செய்தால் பணம் தருகிறேன் என அந்த மந்திரவாதியிடம் பிரீத்தியின் தாயார் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஆணாக மாற விரும்பிய பூனத்தைச் சடங்குகள் செய்வதற்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை மந்திரவாதி கொலை செய்து உடலை முட்புதருக்குள் மறைத்து வைத்துள்ளார். இதற்கிடையே, பூனத்தைக் காணவில்லை என அவருடைய சகோதரர் பர்விந்தர் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பூனம் பேசிய செல்போன் மூலம் விவரங்களைச் சேகரித்துள்ளனர்.
அதன்மூலம் மந்திரவாதியைப் பிடித்து விசாரித்து உள்ளனர். அவரும், கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், பூனத்தின் சடலத்தையும் காட்டியுள்ளார். அந்த நேரத்தில் போலீசாரின் பிடியிலிருந்து மந்திரவாதி தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய மந்திரவாதியையும் கொலை குற்றத்துக்கும் ஆளானவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.