இருநபர்களுக்கு இடையே சண்டை ஏற்படும் போது விதைப்பைகளை நசுக்கி காயப்படுத்துவதை கொலை முயற்சியாக கருத முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்காரப்பா. இவர் தனது ஊரில் நடைபெற்ற நாராயண சுவாமி கோவில் ஊர்வலத்தில் பங்கேற்று ஆடிக் கொண்டு இருந்தார். அப்போது பாமேஷ்வரப்பா என்பவர் அவ்வழியாக தனது பைக்கில் வந்தார். அந்த சமயத்தில், ஓம்காரப்பாவுக்கும் பரமேஷ்வராப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் கடுமையாக தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் பரமேஸ்வரப்பா, ஓம்காரப்பாவின் விதைப்பைகளை நசுக்கி கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ஓம்காரப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இது தொடர்பாக ஓம்காரப்பா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓம்காரப்பாவை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய பரமேஸ்வரப்பா மீது இந்திய தண்டனை சட்டம் 307( கொலை முயற்சி) மற்றும் 504, 341 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு சிக்மகளூரு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2 ஆண்டுகளில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவரது குற்றம் நிரூபிக்கப்படுவதாக அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், 7 ஆண்டுகள சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் புகார்தாரருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இந்த சண்டையின்போது விதைப்பையை நசுக்கியிருக்கிறார். இதற்காக அவருக்கு கொலை செய்ய வேண்டும் எண்ணம் இருந்ததாக கருதக் கூடாது. ஏனெனில், கொலை செய்யும் நோக்கத்துடன் வருகை தந்து இருந்தால் அவர் ஏதேனும் ஆயுதங்களை கொண்டு வந்திருக்கலாம்.
ஓம்காரப்பாவுக்கு கடுமையான காயங்களை குற்றம் சாட்டப்பட்ட பரமேஷ்வரப்பா ஏற்படுத்தியிருக்கிறார். இந்த காயங்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு மரணத்தை கூட ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும் கூட தாக்கியவரின் நோக்கம் கொலை செய்வது கிடையாது. இருந்தாலும், சண்டையின் போது விதைப்பையை நசுக்கி ஓம்காரப்பாவுக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் அவருக்கு விதைப்பைகளையே எடுக்கும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு சட்டப்பிரிவு 324 -ன் படி அவருக்கு இந்த தண்டனையை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.