உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள லால்குர்தியில் கெளஷல் ஸ்வீட்ஸ் என்கிற பெயரில் இனிப்பகம் ஒன்று உள்ளது. இந்த இனிப்பகத்தைச் சேர்ந்த சுபம் கௌஷல் என்பவர் நடத்தி வருகிறார். இவர், அந்தக் கடையின் மூன்றாம் தலைமுறை உரிமையாளர் ஆவார். சமோசாவை வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரும் வகையில், வித்தியாசமான ஐடியாவைக் கண்டுபிடித்துள்ளார். அதன் வடிவில் உதயமானதுதான் இந்த 12 கிலோ சமோசா. அத்துடன் இந்த சமோசாவை அரை மணி நேரத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.71,000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 4 கிலோ மற்றும் 8 கிலோ ஆகிய அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ளன.
2 கிலோ எடைகொண்ட இந்த மெகா சைஸ் சமோசா ‘பாகுபலி சமோசா’ என அழைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு, பட்டாணி, பனீர், உலர்பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டிருக்கும் இந்த மசாலா மட்டும் 7 கிலோ கொண்டது எனக் கூறப்படுகிறது. இந்தச் சமோசாவை கெளஷல் கடை சமையல்காரர்கள் சுமார் ஆறு மணி நேரம் தயார் செய்வதாகவும், அதை, எண்ணெய்யில் வறுத்து எடுக்க ஒன்றரை மணி நேரமாவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாகுபலி சமோசாவின் விலை ரூ.1,100 எனக் கூறப்படுகிறது. பலரும் தங்கள் பிறந்தநாளின்போது ‘கேக்’குக்கு பதில் இந்த சமோசாவை வாங்கி வெட்டி பகிர்ந்து உண்டு மகிழ்கிறார்களாம். இதுவரை சுமார் 50 பாகுபலி சமோசாக்கள் ஆர்டரின் பேரில் தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறதாம். இதுவரை இந்த சமோசா சாப்பிடும் சவாலில் யாரும் வெற்றி பெறவில்லை என்கிறார். அதிகபட்சமாக வாடிக்கையாளர் ஒருவர் சுமார் 9 கிலோ சமோசாவை 25 நிமிடங்களில் சாப்பிட்டு இருப்பதே சாதனையாக உள்ளதாம்.