இளைஞர்களுக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைத்தால் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை CSI மெட்ரிக் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் 62 நிறுவனங்கள் கலந்து கொண்டது. 2,000 மாணவர்கள் பயன் பெரும் வகையில் வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய எம்பி கனிமொழி, “கொரோனா காலத்தில் நிறைய இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்த சூழல் இல்லை. வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டை நோக்கி வரும் அளவுக்கு முதலமைச்சர் வேலை செய்துள்ளார்.
வேலை கிடைக்கவில்லை என்றாலும், நிறுவனம் உங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்ற அனுபவத்தை நீங்கள் பெற்றுள்ளது என்பதே முக்கியம். வெளி மாநிலத்தில் வேலை கிடைத்தாலும் அங்கு சென்று பணியாற்றுங்கள். அம்மா கையில் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே உள்ளது. இருப்பினும் வெளி மாநிலத்தில் உங்களுக்கு வேலை கிடைத்தால் சென்று விடுங்கள். அப்போதுதான் புது மனிதர், புது அனுபவத்தை பெறுவீர்கள். வெளி மாநிலத்தில் வேலை கிடைத்தாலும் நீங்கள் அதை பயன்படுத்த வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.