வட இந்தியாவில் பக்ரா பியாஸ் என்ற நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்படும் ரயில் கடந்த 73 ஆண்டுகளாக தனது பயணிகளுக்கு இலவச பயணத்தை வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் பக்ரா பியாஸ் எனும் நிர்வாகம் தான் இந்த இலவச ரயில் சேவையை இயக்கிவருகிறது.வட இந்தியாவில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கும், பஞ்சாப் மாநிலத்திற்கும் இடையே தான் இந்த சேவை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில் ‘பக்ரா நங்கல்’. பனி படர்ந்து காணப்படும் இமாச்சலப் பிரதேசத்தின் பக்ரா நகரிலிருந்து பஞ்சாபின் நங்கல் வரையிலான 13-கிமீ தூரத்தை இந்த ரயில் பாதை உள்ளடக்கியது. இந்த பயணம் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முடிவடைகிறது.
இந்த சேவை எப்போது எதற்காக தொடங்கப்பட்டது தெரியுமா? பக்ரா-நங்கல் இலவச ரயில் பாதை 1963 இல் தொடங்கப்பட்டது. முதலில் பக்ரா-நங்கல் அணைக்கு கட்டுமானப் பொருட்கள், தொழிலாளர்களை அழைத்து செல்வது தான் நோக்கமாக இருந்தது. அணை கட்டிய பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது இந்த ரயில் கிட்டத்தட்ட 25 கிராமங்களின் உயிர்நாடி. குறைந்தபட்சம் 300 பயணிகள் தினசரி பயணத்திற்கு இதைப் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியாக உள்ளது. எல்லோரும் இலவசமாக பயணிக்கிறார்கள்.
இந்த ரயில் பயணத்தின் சிறப்பம்சமாக பக்ரா அணை உள்ளது. இந்த அணை இமாச்சல பிரதேசத்தில் உள்ளது. பொறியியலின் அற்புதம் என்றே இந்த அணையை சொல்லலாம். இதை காண பல்வேறு சுற்றுலாப்பயணிகள் படையெடுக்கின்றனர். ஏனெனில் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. இந்த அணை சட்லஜ் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி பாசன நீர் மற்றும் நீர் மின்சாரம் வழங்குகிறது. இந்த இலவச ரயில் அணையைக் கடந்து செல்கிறது. இந்த ரயில் பயணத்தில் அணையையும், அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பின் எழிலையும் கண்டு ரசிக்கலாம்.
இந்த ரயிலின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் இப்பகுதியின் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது தான். முன்னதாக 2011 ஆம் ஆண்டில், ரயில்வேயை நிர்வகிக்கும் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (பிபிஎம்பி), இலவச சேவையை நிறுத்துவது குறித்து பரிசீலித்தது. ஆனால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பணம் சம்பாதிப்பதை விட, இந்த இடத்தின் பாரம்பரியத்தை உலகுக்கு காட்டுவது முக்கியம் என சொல்லப்பட்டது. நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:05 மணிக்கு புறப்பட்டு, காலை 8:20 மணிக்கு பக்ராவை சென்றடைகிறது. அது மீண்டும் அன்று மாலை 3:05 மணிக்கு நங்கலில் இருந்து புறப்பட்டு மாலை 4:20 மணிக்கு பக்ராவை சென்றடைகிறது.