மக்கள் தொகை வீழ்ச்சியை கட்டுப்படுத்த இத்தாலி அரசு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இத்தாலியில் உள்ள கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு புகழ்பெற்ற அழகிய தெற்குப் பகுதியான கலாப்ரியாவில் பல ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு மக்கள் தொகையைப் பெருக்குவதற்காக ஒரு திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது. அந்த திட்டத்தின் படி, நீங்கள் கலாப்ரியா வந்து தங்குவதற்கு, அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு 26,000 யூரோக்கள் (ரூ.26.48 லட்சம்) வரை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. கலாப்ரியாவிற்கு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஊக்குவிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அங்கு இருக்கக்கூடிய உள்ளூர்வாசிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய தொழிலைத் தொடங்கலாம் அல்லது அங்கே இருக்கக்கூடிய அதிக பணியாளர்கள் தேவைப்படும் உணவகங்கள், கடைககளில் வேலைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் ஏற்கனவே உங்கள் பகுதியில் வேலையில் இருந்தாலும் கூட அந்த வேலையை இங்கே வந்து விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
இதற்கு மூன்று வருட காலத்திற்கு 26,000 யூரோ (ரூ.26.48 லட்சம்) வரை வழங்கப்படும். இந்த பணம் உங்களுக்கு மொத்தமாகவோ அல்லது மாதாந்திரக் கட்டணமாகவோ வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு தகுதி பெற நீங்கள் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதோடு, உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 90 நாட்களுக்குள் கலாப்ரியாவுக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும். மேலும், “ஆக்டிவ் ரெசிடென்சி இன்கம்” என்று அழைக்கப்படும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட 620,000 யூரோக்கள் (ரூ.6.31 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.