கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றித் திரியும் கும்பல், அப்படியே அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும், வருமான வரித்துறை அலுவலகத்திற்கும் செல்ல வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தி, சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டில் திணிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்த வகையில், சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு அலுவலகத்தில் இந்தி பெயரில் இருக்கும் பலகைகளை பெயிண்ட் அடித்து அழித்தனர். அதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பாளையங்கோட்டை, சங்கரன் கோவில் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருக்கும் பெயரை கருப்பு பெயிண்ட் அடித்து திமுகவினர் அழித்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”மும்மொழி கல்விக் கொள்கையை ஹிந்தி திணிப்பு என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாக திறமை போன்ற பிரச்சனைகளை மடை மாற்றுவதற்காக காலம் காலமாக உள்ள அதே மொழி அரசியலை தற்போது மீண்டும் கையிலெடுத்துள்ளனர்.
கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றித் திரியும் கும்பல், அப்படியே அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும், வருமான வரித்துறை அலுவலகத்திற்கும் செல்ல வேண்டும். இந்த அலுவலகங்களின் முகவரிகளை அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், அவர்கள் தான் அடிக்கடி அங்கு சென்று வருகின்றனர். திமுக குடும்பத்தினருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு மட்டும் ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.