சாக்லேட்டுகளை விரும்பி அதிகமாக சாப்பிட்டால் அதன் விளைவாக நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிகம் விரும்பி சாப்பிடுவது என்றால் அது சாக்லெட் தான். உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படும் உணவுப் பொருட்களில் ஒன்றாக சாக்லேட் இருக்கிறது. பொதுவாக குடும்ப நிகழ்ச்சிகள், அலுவலக கொண்டாட்டங்கள் மற்றும் இதர சிறப்பு விழாக்களின் போது சாக்லேட் பரிமாறிக் கொள்ளப்படுவது இயல்புதான் என்றாலும், சாதாரண நாட்களில் எப்போதுமே சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற தேடல் நம் மனதுக்குள் எதனால் வருகிறது என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக நம் உடலில் சில ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதன் காரணமாக சாக்லேட் தேடல் இருக்குமோ என்ற சந்தேகம் நீண்ட காலமாகவே இருக்கிறது. அதிலும் மெக்னீசியம் சத்து குறைபாடு காரணமாக சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற ஆசை மனதில் எழும்பி கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
“தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடு, 300 விதமான என்ஜைம் விளைவுகள் போன்றவற்றுக்கு மெக்னீசியம் சத்து அவசியமானது. இந்த சத்து குறைபாடு இருந்தால் உணவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நோக்கி மனம் அலைபாயும். ஆனால் இந்த தேடலை நேரடியாக சாக்லேட்டுடன் ஒப்பிட்டு விட முடியாது. உயர் தரத்திலான சாக்லேட்டுகளில் 70% அளவுக்கு கொக்கோ மற்றும் இஞ்சி அளவுக்கு சர்க்கரை மற்றும் இதர பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அதுவே சாதாரண சாக்லேட்டுகளில் சர்க்கரை தான் மிகுதியாக சேர்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் சாக்லேட்டுகளை விரும்பி அதிகமாக சாப்பிட்டால் அதன் விளைவாக நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.