மத்தியப்பிரதேசத்தில் கை பம்பு வைத்து கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 7 அடி ஆழத்தில் பேரல்கள் அமைத்து அதில் கள்ளச்சாராயம் நிரப்பி அதன் மேல் கைப்பம்பு வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டம் சஞ்சோடா, ரகோகர் ஆகிய இரண்டு கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வயல்வெளிக்கு நடுவில் கைப்பம்பு ஒன்று தென்பட்டது. அதை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அந்த கைப்பம்பை அடித்து பார்த்தனர். அப்போது அந்த பைப்பில் இருந்து சாராயம் அருவிபோல் கொட்டியது. இதனைக் கண்ட போலீசார், அதிர்ச்சி அடைந்தனர்.

கைப்பம்பு அடித்தால் தண்ணீர்தானே வரும் இதில் என்ன சாராயம் வருகிறது..? என குழம்பி போன போலீசார், நிதானமாக ஆராய்ந்தனர். அப்போதுதான் வயல்வெளிக்கு நடுவில் சாராய பீப்பாய்களில் புதைத்து, அதன் மீது கை பம்பு அமைத்து, கள்ளச்சாராய கும்பல் சாராயம் விற்பனை செய்து வருவது அவர்களுக்கு புரிந்தது. பின்னர் கைப்பம்புக்கு அடியில் தோண்ட ஆரம்பித்தனர், அப்போது அவர்கள் எதிர்பார்த்தபடி, 7 அடி ஆழத்தில் பெரிய பேரல்கள் அமைத்து கள்ளச்சாராய கிணறு உருவாக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் காய்ச்சப்படும் சாராயத்தை கொண்டுவந்து இந்த சாராயக் கிணற்றில் ஊற்றி, கை பம்பு மூலம் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

பின்னர் புதைக்கப்பட்டிருந்த சாராய கிணற்றை தோண்டி மேலே எடுத்தனர். பல பேரல்கள் அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. அவற்றில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் கலப்பட சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், 8 பேரை கைது செய்தனர். இதேபோல சஞ்சுட்டா, பான்புரா உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலப்பட சாராயம் தயாரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. பல இடங்களில் இருந்து சாராய சூளைகள், ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.