தமிழ்நாடு அரசு வரி செலுத்த தவறினால் சட்டப்பிரிவு 356 பாயும் என பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மிரட்டல் விடுத்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5,000 கோடி நிதியை இழக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கிடையே, கடலூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் கல்வி தரத்தை மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டியுள்ளது. ஆனால், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மறுக்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நாம், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், நிதி தர மறுக்கிறார்கள். இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கவில்லை. இது மாணவர்களை பள்ளியில் இருந்து துரத்தும் கொள்கை. 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி அவர்களை வடிகட்ட பார்க்கிறார்கள். 9 – 12ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். கல்லூரியில் சேர்வதற்கு கூட தேசிய அளவில் தேர்வு வைக்கிறார்கள். அதேபோல், 10ஆம் வகுப்பு முதல் பட்டப்பிடிப்பு வரை படிப்பை தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களாகவே விலகலாம் என்று அந்த கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கையெழுத்து போட்டால் மட்டுமே ரூ.2,152 கோடி நிதி கிடைக்கும். ஆனால், ரூ.10,000 ஆயிரம் கோடி கொடுத்தாலும் கையெழுத்து போட மாட்டோம். இந்த நிதிக்காக கையெழுத்து போட்டால் 2 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடுவோம். அந்த பாவத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்ய மாட்டான்” என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே, மத்திய அரசுக்கு வரி தர முடியாது என்று சொல்ல ஒரு நொடி தான் ஆகும் என முதல்வர் முக.ஸ்டாலின் பேசியிருந்தார்.
இந்நிலையில் தான், தமிழ்நாடு அரசு வரி செலுத்த தவறினால் சட்டப்பிரிவு 356 பாயும் என பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வரி கொடுக்க மாட்டேன் என்று ஒரு நொடியில் சொல்லி விடலாம்.. அதேபோல், 356 ஐ ஒரு நொடியில் பயன்படுத்தி விடலாம் என்று மத்திய அரசு சொன்னால் என்ன ஆகும்..? என பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ”வரி தர முடியாது என்றால் 356 பாயும்” என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் 1975, 1980, 1988, 1991 ஆகிய ஆண்டுகளில் இந்த 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. தற்போது, மத்திய அரசு – தமிழ்நாடு அரசுக்கிடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாஜக இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.