நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
சீமானின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேரும் பிரளயத்தை கிளப்பியது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து அநாகரிகமாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சீமான் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் தேசிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? மன்னிப்பு கேட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என்றார். மேலும் இந்த மக்கள் தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற சீமான், இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக தான் எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளேன், அவர்கள் என்ன செய்தார்கள்? என் வலியும் வேதனையும் அவர்களுக்கு தெரியாது என்றார்.
எதை வைத்து பெரும்பான்மை சிறுபான்மை என மதிப்பிடுகிறீர்கள் என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். இங்கிருக்கும் கிறிஸ்துவனும், இஸ்லாமியனும் தமிழன்தான், பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன் என்ற சீமான், வந்தவன் போனவன் எல்லாம் சிறுபான்மை என்று பேசிக்கொண்டு இருந்தால் செருப்பை கழட்டி அடிப்பேன் என செருப்பை கழட்ட சென்றார். மேலும் வெறிகொண்டுவிடுவேன், எதற்காக சிறுபான்மை என்கிறீர்கள் என்று கோபமாக கத்தினார் சீமான்.
சீமானின் இந்த ஆவேச பேச்சு க்ளிப்பிங் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், சாத்தானின் பிள்ளைகள் என்று கூறிவிட்டு, இப்போது எதிர்ப்பு எழுந்ததால் சமாளிக்க பார்க்கிறார் சீமான் என கூறி வருகின்றனர். இதனிடையே இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறவில்லை, சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டீர்கள் என்றுதான் ஆதங்கப்பட்டேன், அதுவும் அநீதிக்கு துணை நிர்பவர்களைதான் என்றும் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.