சென்னை வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில், அதிகாலை நேரத்தில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் போது யாரோ வெளியில் இருந்து வீடியோ எடுத்துச் சென்றதாக லேடீஸ் ஹாஸ்டலின் நிர்வாகி கடந்த 14ஆம் தேதி வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த மர்ம நபர் குறித்து விசாரித்து வந்தனர். இநிலையில், ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? என்பது போல மீண்டும் அதே ஹாஸ்டலுக்கு வந்திருக்கிறார் அந்த நபர். மீண்டும் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 18ஆம் தேதி மீண்டும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மர்ம நபரைப் பிடிக்க வேளச்சேரி உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஹாஸ்டல் பகுதிகளில் இருக்கும் அனைத்து சிசிடிவி காட்சிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அந்த மர்ம நபர், இருசக்கர வாகனத்தில் வேளச்சேரியில் இருந்து பெசன்ட் நகர் வரையில் செல்வதை சுமார் 50 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கண்டறிந்தனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் பதிவு எண்ணை வைத்து, அந்த மர்ம நபர் துரைராஜ் (27) என்பதும், இவர் ஏற்கெனவே கைதான பழைய குற்றவாளி என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். பின்னர் தனிப்படை போலீசார் துரைராஜைக் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், துரைராஜ் மீது 9 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சில மாதத்திற்கு முன் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின், கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தெரியவந்தது. திருடுவதற்கு நோட்டமிட அதிகாலை நேரத்தைத் தேர்ந்தெடுத்த துரைராஜ், பெண்கள் விடுதிகளில் பெண்கள் குளிப்பதை பார்த்து விட்டால் உடனே அதை வீடியோ எடுத்து பார்த்து ரசித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதனை ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான வீடியோ காட்சிகள் இருந்தன. பின்னர் கைது செய்யப்பட்ட துரைராஜை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.