வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பினால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்..
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பீகார், அசாம், மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். தொழிற்சாலைகள், கட்டிட பணி, ஓட்டல்கள், மளிகை கடை வரை பணியாற்றி வருகின்றனர்.. இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் பரவியது. இவ்விவகாரம் பீகார் சட்டசபை வரை தற்போது சென்று விட்டது. நேற்று அம்மாநில சட்டசபையில் இவ்விவகாரம் எதிரொலித்தது.
இந்த சூழலில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.. சமூக ஊடகங்கள் வதந்தி பரப்பி சில கீழ்த்தரமாக அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. ஊடகங்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் சமூக பொறுப்பை உணர்ந்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்..
இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.. தெய்னிக் பாஸ்கர் பத்திரிகை ஆசிரியர், தன்வீர் போஸ்ட் பத்திரிகை ஆசிரியர் முகமது தன்வீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.. அதே போது வதந்தி பரப்பியதாக தூத்துகுடி காவல்நிலையத்தில் பிரசாந்த் உமாராவ் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.. இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.. மேலும் பொய் செய்தி பரப்பினால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்..