பெரியாரை பற்றி பேச தொடங்கினால் எல்லோரும் தீக்குளித்து செத்துவிடுவீர்கள் என்று சீமான் காட்டமாக பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், பெரியார் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், சீமானை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை பெரியார் ஆதரவு இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். அப்போது, அவ்வழியாக சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சீமான் வீடு அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் டிங்கர் குமரன் உள்ளிட்ட 10 நிர்வாகிகளை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சீமான், பெரியார் குறித்து நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் குண்டு போட வருவீங்களா? பெரியாரை யாரும் இழிவாக பேசவில்லை. பெரியார் பேசியதை எழுதியதைத்தான் நான் பேசினேன்.
அப்படினா நான் பெரியாரைப் பற்றி பேசத் தொடங்கினால், நீ என்ன செய்வ..? தீக்குளித்து செத்துப் போவியா? இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஏதோ வேற வேலை இருக்கிறது. அதனால், இடைவெளி விட்டுள்ளேன். மீண்டும் ஆரம்பித்துவிடுவேன். பார்த்து அடக்கமா இருங்க. தோண்டி தோண்டி எடுத்து என் முன்னாடி நிறுத்தாதீங்க” என காட்டமாக பேசியுள்ளார்.