தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கப்படுமா என்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணிக் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ”அதிமுக – பாஜக கூட்டணி நீண்ட இழுபறிக்கு பிறகு உறுதியானது என்பது கிடையாது. அமித்ஷா சென்னை வந்த உடனே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அன்றைய தினமே கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி தொடர்பாக தற்போதைக்கு எதுவும் கூற முடியாது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். இந்த கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைவராக இருப்பார். நெல்லையில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து டெல்லி தலைமை தான் முடிவெடுக்கும்.
அமைச்சர் பொன்முடி பேசியதற்கு முதல்வர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். இதுமாதிரி ஒரு கட்சி இருக்க வேண்டுமா..? என மக்கள் அனைவரும் 2026 தேர்தலில் முடிவு செய்ய வேண்டும். பொன்முடிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்” என்றார்.