சென்னையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “திருமாவளவனின் மனது முழுவதும் இங்கே தான் இருக்கிறது என பேசியதோடு திமுகவை நேரடியாக தாக்கும் வகையில் சில விஷயங்களை பேசி பரபரப்பை கிளப்பினார். பிறப்பால் ஒருவர் தமிழ்நாட்டில் முதல்வர் ஆகக்கூடாது. 2026இல் மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். ஒரு குடும்பம் திரையுலகை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என ஆதவ் அர்ஜுனா பேசியது, திமுக மற்றும் அதன் குடும்பத்தினரை தாக்கும் வகையில் இருந்தது.
ஆதவ் அர்ஜுனா பேசி முடித்த சில நிமிடங்களில் திமுக எம்பி ரவிக்குமார், எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ், சங்கத்தமிழன் உள்ளிட்ட பலரும் தங்கள் சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக திருமாவளவன் அர்ஜுனாவின் பேச்சில் தனக்கு உடன்பாடு இல்லை. திமுக கூட்டணியை உடைக்கும் வகையில் 100% அவர்கள் செயல்பாடு இருக்கிறது என பேசியிருந்தார்.
மேலும், கட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இநீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி திருமாவளவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இதெல்லாம் ஏற்கனவே தான் கணித்தது தான். விசிகவில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னதாக தானே விலகி தவெக-வில் இணைந்து கொள்ள ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னோட்டமாகவும், கட்சியில் தனது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்குவதற்காகவே இவ்வளவு நாள் விசிகவில் பயணித்ததாகவும், இன்னும் ஓரிரு நாளில் தவெகவில் இணைய போகிறேன் என அவரது ஆதரவாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணையலாம் என்றும் தவெகவின் கொள்கை மற்றும் தேர்தல் வியூக குழுவில் ஆதவ் அர்ஜுனா இடம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.