பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ப்ரியாமணி. அதனையடுத்து பாலுமகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே பாரதிராஜா, பாலுமகேந்திரா என இரண்டு பெரும் ஆளுமைகளின் இயக்கத்தில் நடித்ததால் திரையுலகில் வெகுவாக கவனம் ஈர்த்தார் ப்ரியாமணி. இப்படிப்பட்ட சூழலில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் நடித்தார். முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். கார்த்தியிடம் காதலில் கசிந்துருகுவதும், காதல் விவகாரம் வீட்டில் தெரிந்த பிறகு யாருக்கும் அஞ்சாமல் இருப்பதும் என ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பு ராட்சசியாக மிரட்டியிருந்தார். குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்தார். இதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
பருத்திவீரனில் தேசிய விருது கிடைத்ததால் கண்டிப்பாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக ஒன்றிரண்டு படங்களின் வாய்ப்பே அமைந்தது. அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவர் கடைசியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஷாருக்கான் டீமில் இருக்கும் ஒரு கைதியாக நடித்திருந்தார் ப்ரியாமணி. ஜவான் படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை மீண்டும் அவருக்கு பிறந்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
“சினிமாவில் நான் இன்னமும் நடித்துக்கொண்டிருப்பதற்கு எனது கணவர்தான் காரணம். அவரால்தான் என்னால் நடிகையாக இன்னும் வலம் வர முடிகிறது. எனக்கு இப்போது 39 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு 40 வயது.எனவே என்னை ஆண்ட்டி என கிண்டல் செய்வார்கள், பாடி ஷேமிங் செய்வார்கள்.ஆனால் அதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. இப்போதும் நான் ஹாட்டாகத்தான் இருக்கிறேன்” என்றார்.