டெல்லியில் தேசிய தலைவர்கள் உடனான சந்திப்பிக்குப்பின் சென்னையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும், கூட்டணியின் முறிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர்கள் தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல என்றே கூறினர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக 39 தொகுதிகளிலும் அடுத்த 10 நாட்களுக்குள் பொறுப்பாளர்களை நியமிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இதற்காக பட்டியல் தேர்வு செய்யப்பட்ட பிறகு, தேசிய தலைமைக்கு நேரடியாக அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். எந்த குற்றப்பின்னணியும் இல்லாதவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருக்கிறது.
பொறுப்பாளர்களை மாநில அளவிலான நிர்வாகிகள் தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்ற அண்ணாமலையின் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.