கனியாமூர் தனியார் பள்ளி இன்னும் ஒரு மாதத்திற்குள் முழுமையாக இயங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் அப்பள்ளி முழுவதுமாக கலவரத்தால் சேதமடைந்தது. இதையடுத்து, ஜூலை மாதம் 13ஆம் தேதி முதல் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்பதாவது முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போது மாற்று இடத்தில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளியின் தாளாளர், செயலாளர் உள்பட 5 பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் 3 பேரும் மதுரையிலும், இரண்டு ஆசிரியைகளும் சேலத்திலும் தங்கி, காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். இந்நிலையில், இன்னும் சில தினங்களில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் பள்ளி, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், விரைவாக சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிவு பெற்றவுடன் 5 முதல் 8 வகுப்பு வரையிலும், அதன் பிறகு 1 முதல் 4 வகுப்பு வரையிலும் பள்ளி வகுப்புகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.