இங்கிலாந்தை சேர்ந்த லூசி ஐசக் ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் கருவுற்றார். அதே சமயம் ஐசக் கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
புற்றுநோய்க்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் உயிரை காப்பற்ற முடியாது. ஆனால் 12 வார கரு உள்ளே இருக்கிறது. எனவே, எப்படி சிகிச்சை அளிப்பது? கருவை கலைக்கவும் முடியாது. சரி பிரசவத்திற்கு பின்னர் புற்றுநோய் கட்டியை அகற்றலாம் என்றால், அதுவரை காத்திருக்க முடியாது. உயிருக்கு ஆபத்தாகிவிடும். அதனால், உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.எனவே, மருத்துவர்கள் வேறு வழிகளை ஆராய்ந்தனர்.
அதாவது கருவை கருப்பையுடன் சேர்த்து வெளியில் எடுத்திருக்கிறார்கள். பின்னர் புற்றுநோய் கட்டியை ஆப்ரேஷன் செய்து அகற்றியிருக்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் மஜ்த் கூறுகையில், “நாங்கள் கருவை வெளியில் எடுத்து வைத்துவிட்டு கட்டியை அகற்றினோம். இது கொஞ்சம் சிக்கலான நடைமுறைதான். மொத்தம் 2 மணி நேரம் கரு வெளியில் இருந்தது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் கருவின் வெப்பநிலையை நாங்கள் பரிசோதித்து வந்தோம்.
சின்ன தவறு நடந்தால் கூட அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இறுதியாக நாங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்து முடித்தோம்” என்று கூறியுள்ளார். டாக்டர் சோலெய்மானி மஜ்த் தலைமையில் சுமார் 30 மருத்துவர்கள் கொண்ட குழுதான் இந்த சாதனையை செய்திருக்கிறது. சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்கு பிறகு குழந்தை பிறந்திருக்கிறது. சராசரியான உடல் எடையுடன் குழந்தை ஆரோக்கியமாக பிறந்திருக்கிறது.
குழந்தையை கையில் வாங்கிய தருணத்தை தங்களால் மறக்கவே முடியாது என்று தம்பதியினர் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை பொறுத்தவரை குழந்தை இரண்டு முறை பிறந்திருக்கிறது. மருத்துவ உலகில் இப்படியான அறுவை சிகிச்சைகள் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.