விமானப் பயணங்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.
விமான பயனங்களின் போது குழந்தைகளுக்கு பெற்றோர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து புகார் தெரிவித்ததை அடுத்து, தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவை இன்று வழங்கி உள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” விமான நிறுவனங்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விமான பயணத்தின் போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதி செய்யவும் அந்த உத்தரவு வழிவகை செய்கிறது.
2 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரே PNR-ல் பயணம் செய்யும் வகையில், குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவருடன் இருக்கை ஒதுக்கப்படுவதை விமான நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். மேலும் அதற்கான பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும்” என்று அந்த உத்தரவு தெரிவித்துள்ளது.