விழுப்புரத்தில், சிகிச்சைக்கு வந்த கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிசியோதெரபி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய கல்லுாரி மாணவி, விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் எம்.ஏ., படித்து வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மற்றும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவமனைக்கு, இடுப்பு வலி பாதிப்பிற்காக சிகிச்சைக்கு சென்றார்.
மாணவி கடந்த 3 நாட்களாக அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சிகிச்சைக்காக சென்றபோது, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் சிகிச்சை கொடுப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது மாணவிக்கு அவர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதனால் சிகிச்சை அறைக்குள்ளிருந்து கூச்சலிட்டவாறு வெளியே ஓடி வந்த அந்த பெண், டாக்டரின் பாலியல் தொல்லை குறித்து செல்போன் மூலம் உறவினர்களிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து மருத்துவமனைகு விரைந்து வந்த மாணவியின் உறவினர்கள், சந்தோஷ்குமாரை பிடித்து சரமாரியாக அடித்து துவைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியதாவது, “நான் அறைக்குள் சென்றதும் என்னை படுக்க வைத்துவிட்டு, அங்கிருக்கும் சி.சி.டி.வி கேமராக்களில் தெரியக் கூடாது என்பதற்காக நான்குபுறமும் ஸ்க்ரீனை மூடினார். பல இடங்களில் தொட்டு என்னிடம் தவறாக நடந்து கொண்டார். என்னை திரும்ப படுக்க வைத்துவிட்டு பேன்டை கழற்றுகிறார். எனக்கு சிகிச்சை கொடுக்க அவர் ஏன் பேன்டை கழற்ற வேண்டும் ? என்னைப் போல் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் ? அதனால் இந்த டாக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்?” என்று மாணவி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
காயமடைந்த டாக்டர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மாணவி, கொடுத்த புகாரில், சந்தோஷ்குமார் மீது பாலியல் தொந்தரவு செய்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், விழுப்புரம் மேற்கு போலீசார் டாக்டர் சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.